யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
”போதையிலிருந்து விடுதலையான நாடு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து பல்வேறு விடயங்களைக் கேட்பவர்கள், எங்களுக்குத் தேவையற்ற விடயங்களும் சமூகத்திலுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். சாராயம் விற்பனை செய்யும் மதுபானசாலையை மூடுமாறு யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. பேதைப்பொருளுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுமில்லை, அதற்காக வீதியில் இறங்குவதுமில்லை. தேவையற்ற விடயங்களுக்காக இந்த நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் ஏன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என நான் உங்களிடம் கேட்கின்றேன். உங்களுக்கு ஒரு கவலையான விடயத்தைக் கூற விரும்புகின்றேன். நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீ்ர்கள். அதிகமாக மதுபானம் விற்பனை செய்து, அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே. இங்கு 69 – 70 மதுபானசாலைகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் யாழ். மாவட்டமானது போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்ற மாவட்டம் என்பதை மறந்து விடவேண்டாம்.
என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் போதைப்பொருள் தொடர்பான ஆவணம், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.
அதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வு அதிபர் எஸ்.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய திறப்பு விழா ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.